கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது ஏவுகணை-தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டோபோல்- ஆர்.எஸ்-12 எம் (Topol-RS-12M) என்ற இந்த ஏவுகணை சோதனையை நேற்று நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் விளாடிமிர் புதின், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ நாடுகளின் நிலை மற்றும் செயல்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.
இந்த ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், உலகளவில் பாதுகாப்பு மற்றும் அமைதியை தொடர்ந்து நிலைநிறுத்தவே ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் புதின் அப்போது குறிப்பிட்டார்.
சுமார் 6,000 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் வல்லமையை ரஷ்யாவின் நவீன ஏவுகணை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.