அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி மாநாட்டில் ஒபாமா பெயர் அறிவிப்பு!
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டென்வரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஜனநாயக கட்சி மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதால், வரலாற்றுப் பக்கங்களில் ஒபாமாவின் பெயர் இடம் பெறுவதும் உறுதியாகிவிட்டது.
டென்வர் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி இருவரும் மேடைக்கு வந்து ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
இதில் கிளிண்டன் பேசுகையில், அதிபர் பதவிக்கு பொருத்தமான நபர் ஒபாமா என்றும், 8 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்ததன் மூலம் தனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து இதனை தெரிவிப்பதாகவும், ஒபாமா தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்றும் கூறினார்.
அதிபர் வேட்பாளருக்காக ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரியும், நேற்றைய மாநாட்டில் ஒபாமாவை ஆதரித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.