அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி, சோனியா!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
PTI PhotoFILE
உலகளவில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கெல் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க பெடரல் காப்பீட்டு வைப்பு நிதியத்தின் தலைவரான ஷீலா பெய்ர் 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக நலிவடைந்து வருவதைத் தொடர்ந்து இவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவ‌ழியைச் சேர்ந்தவரும், பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் தலைவருமான இந்திரா நூயி 3வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவின் வெல் பாயின்ட் நிறுவன தலைவர் ஏஞ்சலா பிராலி, இங்கிலாந்தின் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சிந்தியா கரோல், அமெரிக்காவின் கிராஃப் புட்ஸ் தலைவர் ஐரின் ரோஸன்பெல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு வெளியான பட்டியலில் 3ஆம் இடம் பிடித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரான காண்டலீஸா ரைஸ், தற்போது 7வது இடத்திற்கு பின்தங்கினார். புஷ் அரசின் ஆட்சிக் காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளதால் காண்டலீஸாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு 21வது இடம்: காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு 2008ஆம் ஆண்டு பட்டியலில் 21வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மாபெரும் தேசிய கட்சியான காங்கிரசுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக பதவி வகித்து வரும் சோனியா, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடு‌த்து வருவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சோனியாவுக்கு நிகரான பெண்மணியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ‌விள‌ங்‌கி வருவதாகவும், காங்கிரஸின் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்காக மாயாவதி, பா.ஜ.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவருக்கு கூடுதல் பலத்தை அளி‌ப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்