முதல் அரசியல் பயணம் இந்தியாவுக்குதான்: பிரசண்டா!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (18:35 IST)
தனது முதல் அரசியல் பயணம் இந்தியாவுக்குத்தான் என்றும் அப்பயணம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் நேபாள பிரதமர் பிரசண்டா கூறியுள்ளார்.
நேபாளத்தில் பிரதமராக பதவியேற்கும் ஒருவர் சம்பிரதாய முறைப்படி அரசு முறைப் பயணமாக முதலில் இந்தியாவுக்கு வருவதுதான் வழக்கம். ஆனால் இந்த முறையை மாற்றி தற்போது புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரசண்டா தனது முதல் பயணமாக இந்தியாவுக்கு வராமல் சீனா சென்றார்.
சீனாவுக்கு 5-நாள் பயணமாக சென்ற பிரசண்டா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டதோடு, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாளத்தில் இதற்கு முன்னர் பதவியேற்ற பிரதமர்கள் அனைவரும் தங்களது முதல் பயணமாக இந்தியாவுக்கு தான் வந்துள்ளனர். ஆனால் பிரசண்டா மட்டும் இம்முறையை மாற்றி சீனா சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், தனது சீன பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் வந்த பிரசண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது முதல் அரசியல் பயணம் இந்தியாவுக்குத்தான், அதுவும் விரைவில் இருக்கும்" என்றார்.
மேலும், நேபாளம் - இந்தியா இடையேயான பாரம்பரிய முடிச்சுகள் மத மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடிப்படையில் தனிச்சிறப்பானது என்று கூறினார்.