என்.எஸ்.ஜி. ஒப்புதலுக்காக அணு சக்தி ஒப்பந்தத்தை ‌திரு‌த்த திட்டமில்லை: யு.எஸ்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (15:28 IST)
அணு சக்தி தொழிநுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி) ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்திய-அமெரிக்க அணசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ‌திரு‌த்து‌ம் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த தேவையான முயற்சிகளை புஷ் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் கூடி ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கும் எ‌ன்று‌ம் கூறினார்.

என்.எஸ்.ஜி-யில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்காத நாடுகளிடம் அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாகவும், அதன் மூலம் என்.எஸ்.ஜி-யின் ஒப்புதலைப் விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராபர்ட் வுட் தெரிவித்தார்.

வியன்னாவில் கடந்த 21, 22ஆம் தேதிகளில் நடந்த என்.எஸ்.ஜி கூட்டத்தில், அமெ‌ரி‌க்கா உ‌‌ள்‌ளி‌ட்ட அணு ச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப நாடுகளுட‌ன் வ‌ணிக‌ம் செ‌ய்வத‌ற்கு‌ ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி இ‌ந்‌தியா மு‌ன்வை‌த்து‌ள்ள வரை‌வி‌‌ற்கு ஒ‌ப்புத‌ல் கிடைக்கவில்லை.

அணு ஆயுத பரவல் உடன்படிக்கையில் இந்தியா கையெழு‌த்திடாத நிலையில், இ‌ந்‌தியா‌வி‌ற்கு விலக்களிக்க என்.எஸ்.ஜி-யில் உள்ள சில நாடுகள் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அணு சக்தி ஒப்பந்ததிற்கு விலக்கு அளிக்காமல் கூ‌ட்ட‌ம் முடிவடை‌‌ந்தது. மேலும் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இதுகுறித்து விவாதிக்க மீண்டும் என்.எஸ்.ஜி கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்