சீன ரசாயன ஆலையில் விபத்து: 18 பேர் பலி!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (12:41 IST)
சீனாவின் தென்மேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலையில் பணியாற்றிய 20க்கும் அதிகமானோர் குறித்து தகவல் இல்லை என்றும், இவ்விபத்தில் 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவாங்ஷி மாகாணத்தில் உள்ள யிசுவோ நகரில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை 6 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) முதல் வெடிவிபத்து நிகழ்ந்தது. தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட தீ, சுமார் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு பரவியதால் தீயணைப்பு படையினர் விபத்துப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

ரசாயன ஆலையில் இருந்து வெளியாகும் புகை உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள ஏற்படுத்தும் என்பதால், ஆலைக்கு அருகே வசித்த 11,500க்கும் அதிகமானவர்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்