சூடான் நாட்டின் டர்பர் பகுதியில் உள்ள நயாலா நகரில் இருந்து 100 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போயிங் ரக விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர்.
தெற்கு தர்பர் தலைநகர் நயாலாவில் இருந்து சூடான் தலைநகர் கார்ட்டூம் நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் பயணிகளைப் போல வந்த சில தீவிரவாதிகள் கடத்தினார்கள். கடத்தப்பட்ட அந்த விமானம் லிபியா தலைநகர் டிரிபோலியில் தரை இறக்கப்பட்டது.
தீவிரவாதிகள் விமானத்தை பிரான்சு தலைநகர் பாரிஸ் நகருக்கு செலுத்த வேண்டும், விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும், விமானத்தையும் பயணிகளையும் மீட்க முயற்சித்தால் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், கடத்தல்காரர்கள் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்து விட்டனர். பெண்கள், குழந்தைகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். விமானத்தில் இருந்த சூடானின் டர்பர் பகுதியைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் தான் விமானத்தை கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.