இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் இன்று காலை கடு‌ம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.6 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திநேரப்படி இன்று காலை 8.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அந்நாட்டு கடல்பகுதியான சுன்டா ஜலசந்திப் பகுதியில் 12 மைல் ஆழத்தில் மையம் கொண்டதாக அந்நாட்டு அரசு புவியியலாளர் பவுஸி தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும், இதையடுத்து சில நிமிடங்களில் இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடல் பகுதியில் உயரமான அலைகள் எழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அமெரிக்க புவியியல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்