பாகிஸ்தானில் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்: 10 பேர் பலி!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (15:57 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் 10 பேர் பலியானர்கள்.
கபால் என்னுமிடத்தில் உள்ள அவாமி தேசியக் கட்சியின் மாகாண உறுப்பினர் வக்கார் அகமது கான் என்பவரது சகோதரர் வீட்டின் மீது ராக்கெட்டை ஏவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வக்கார் அகமது கானின் சகோதரர், 2 உறவினர்கள், 7 பாதுகாப்பு காவலர் உள்பட 10 பேர் பலியானார்கள்.
பின்னர், வீட்டில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி வீட்டைத் தகர்த்தனர். இந்த தாக்குதலின் போது வக்கார் அகமது கான் வீட்டில் இல்லை.
இந்த தாக்குதலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பதாக அதன் செய்தி தொடர்பாளர் முஸ்லிம் கான் கூறியுள்ளார். தலிபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு அவாமி தேசிய கட்சி ஆதரவு அளித்ததற்கு பழிக்குப் பழியாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலிபான் தீவிரவாதிகள் ஸ்வாட் பள்ளத்தாக்கு முழுவதும் இதுபோன்று மேலும் பல தாக்குதல்களை நடத்த உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஸ்வாட் மாகாணத்தில், பைதுல்லா மசூத் தலைமையிலான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அறிவித்துள்ளார்.
இந்த தடை, பழங்குடியின பகுதி முழுவதும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை வேறோடு களைய அரசுக்கு உதவியா இருக்கும் என்றும் அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.