என்.எஸ்.ஜி. கூட்டம் ஒப்புதல் அளிக்காமல் முடிந்தது: செப்.4இல் மீண்டும் கூடும்!
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (21:15 IST)
அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன்வைத்துள்ள வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுக் (என்.எஸ்.ஜி.) கூட்டம் முடிவடைந்தது.
இந்தியாவின் கோரிக்கை மீது இறுதி முடிவினை எடுப்பதற்காக செப்டம்பர் 4 ஆம் தேதி என்.எஸ்.ஜி. மீண்டும் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியன்னாவில் நேற்றுத் துவங்கிய என்.எஸ்.ஜி. கூட்டத்தில், அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன்வைத்துள்ள வரைவின் மீது விரிவான விவாதம் நடந்தது. நேற்றைய கூட்டத்தின் முதல் பகுதிக்குப் பிறகு, தனது வரைவு குறித்து என்.எஸ்.ஜி. உறுப்பினர்களான 45 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விளக்கிய இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடையை அமல்படுத்தத் தான் உறுதிபூண்டுள்ளதை வலியுறுத்தியதுடன், அதுகுறித்து என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் சிலர் கொண்டுள்ள அச்சம் தேவையற்றது என்று தெளிவுபடுத்தியது.
இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது நாள் கூட்டத்திலும், சில நாடுகளின் பிரதிநிதிகள், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு ஏன் விலக்குடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்ற ரீதியில் கேள்விகளை எழுப்பியதால், கூட்டத்தின் முடிவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இதுபற்றி மேலும் விவாதித்து இறுதி முடிவு எடுப்பதற்காக செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் என்.எஸ்.ஜி. மீண்டும் கூடக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.எஸ்.ஜி.யின் இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து, அதில் பங்கேற்ற அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜான் ரூட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டம் நல்ல முறையில் முடிந்துள்ளது. சில உறுப்பினர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். இதில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் தொடர்ந்து நம்புவோம். இறுதி முடிவெடுப்பதற்காக என்.எஸ்.ஜி. மீண்டும் கூடவுள்ளது" என்றார்.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள நிபந்தனையற்ற விலக்குடன் கூடிய அனுமதி வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.