அணு சக்தி: என்.எஸ்.ஜி. நாடுகளிடம் விலக்கு கிடைக்கும்- இந்தியா நம்பிக்கை!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (21:13 IST)
அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரித் தான் முன் வைத்துள்ள வரைவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் வழங்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்தியாவிற்கு விலக்களிப்பது குறித்து 3 நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளதால், இந்தியாவின் வரைவிற்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வியன்னாவில் இன்று துவங்கிய அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) இரண்டு நாள் கூட்டத்தில், இந்தியாவின் வரைவை ஆதரித்த அமெரிக்கா, அணு ஆயுதப் பரவல் தடையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா தானாக முன்வந்து தனது அணு உலைகள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளதையும், அணு உலைகளைப் பிரித்துக் கண்காணிப்பிற்கு உட்படுத்த இந்தியா வைத்துள்ள திட்டத்தையும் அங்கீகரித்துப் பேசியது. இந்தியா தாக்கல் செய்துள்ள இரண்டு பக்க வரைவில், பன்முகஅணு ஆயுதத் தடை உடன்படிக்கை (எஃப்.எம்.சி.டி.)யின் நோக்கத்தை நிறைவேற்ற மற்ற நாடுகளுடன் இணைந்து செயலாற்றத்தான் தயாராக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அணு ஆயுதச் சோதனைகள் தொடர்பாகத் தான் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்றைய என்.எஸ்.ஜி.கூட்டத்தின் முதல் பகுதிக்குப் பிறகு, தனது வரைவு குறித்து என்.எஸ்.ஜி. உறுப்பினர்களான 45 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விளக்கிய இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடையை அமல்படுத்தத் தான் உறுதிபூண்டுள்ளதை வலியுறுத்தியதுடன், அதுகுறித்து என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் சிலர் கொண்டுள்ள அச்சம் தேவையற்றது என்று தெளிவுபடுத்தியது. மூன்று நாடுகளுக்குத் திருப்தியில்லை! இருந்தாலும், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு எதற்காக, சர்வதேச நாடுகளுடன் அணு சக்தித் தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி
அளிக்க வேண்டும் என்ற ரீதியில் ஆஸ்ட்ரியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 3 நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு அளித்துள்ள பதிலில், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டாலும், அணு ஆயுதப் பரவல் தடையை உறுதிப்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளை சுட்டிக்காட்டினர். இதுகுறித்துப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி ஷியாம் சரண் ஆகியோர், இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதால் அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகள் பலவீனமடைந்து விடும் என்று என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் பயப்படத் தேவையில்லை என்று வலியுறுத்தியதாகவும், அணு எரிபொருள் உள்ளிட்ட மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்பாடு தொடர்பாக இந்தியா கொண்டுள்ள கடுமையாக விதிமுறைகளை என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன் வைத்துள்ள வரைவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் வழங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவின் விளக்கம் பயனுள்ள வகையிலும், திருப்தியளிப்பதாகவும் இருந்ததாக என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் தெரிவித்தனர். “சில பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் சிந்திக்கவேண்டியவ ை ” என்று குறிப்பிட்ட அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு அதிருப்தி என்பதைக் குறிப்பிடவில்லை. பன்னாட்டு அணு சக்தி தொழில்நுட்ப வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் என்.எஸ்.ஜி.யின் கூட்டம் நாளையும் தொடர்ந்து நடக்கிறது. இதில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை எனில், வெகு விரைவில் மீண்டும் ஒரு கூட்டம் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயலியில் பார்க்க x