பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதா? மெக்கா சென்ற பிறகே முஷாரப் முடிவு!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (15:14 IST)
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷாரஃப், மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பிறகே அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து முடிவு செய்வார் எனத் தெரிகிறது.

அந்நாட்டை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த பதவி நீக்க தீர்மானத்தில் இருந்து தப்ப அதிபர் பதவியில் இருந்து நேற்று விலகிய முஷாரஃப், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு செல்லும் வரை பாகிஸ்தானிலேயே தங்கியிருப்பார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஆளும் பி.பி.பி. கூட்டணி சார்பில் தன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்பதால் நாட்டை விட்டு தாம் பயந்து வெளியேறுவது போன்ற அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் முஷாரஃப் ஏற்படுத்த மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் பதவியில் இருந்து விலகினாலும் முஷாரஃபுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், பதவியில் இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்று ஏற்றுக் கொள்வதாக முஷாரஃப் உடன் பி.பி.பி மேற்கொண்ட உடன்பாட்டால் தான் முஷாரஃப் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த உடன்பாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியாவும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கியானியும் இந்த உடன்பாட்டுக்கு உத்தரவாதமளிக்கும் சாட்சிகளாக செயல்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து விலகிய பின்னரும் தொடர்ந்து பாகிஸ்தானில் தங்கவே முஷாரஃப் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அவரது நலம் விரும்பிகள் நீங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என அறிவுறுத்தியதால் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாகவும் முஷாரஃபுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்