நேபாள பிரதமராக பதவியேற்றார் பிரசண்டா!
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (18:21 IST)
நேபாள நாட்டின் பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
53 வயதாகும் புஷ்ப கமல் தால் என்ற பிரசண்டா நேபாள நாட்டின் பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு தேசிய சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஷ்டிரபதி பவனில் இன்று நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரசண்டாவுக்கு அந்நாட்டு அதிபர் ராம் பரதன் யாதவ் முறைப்படி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
"நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையுடையவனாக இருப்பேன்" என்று பிரசண்டா அப்போது உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.இந்த பதவியேற்பின் போது அவர் நேபாள நாட்டின் பாரம்பரிய உடைக்குப் பதிலாக சாம்பல் நிற மேற்கத்திய உடையும், கருப்பு நிற தொப்பியும் அணிந்திருந்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷெர் பகதுர் ஷா பங்கேற்றார்.
மேலும், இவ்விழாவில் துணை அதிபர் பரமானந்தா ஜா, அரசியல் நிர்ணய சபைத் தலைவர் சுபாஷ் நேம்வாங், தலைமை நீதிபதி கேதர்நாத் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.