முஷாரஃப் பதவி விலகுவது ந‌ல்லது: சர்தாரி!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (18:44 IST)
அதிபர் பதவியில் இருந்து விலகி தமக்குள்ள அறிவு முதிர்ச்சியை முஷாரஃப் வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டான் செய்தி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு முஷாரஃப்புக்கு நாங்கள் (அரசியல் கட்சிகள்) வலியுறுத்தியுள்ளோம், இதனை ஏற்று அவர் பதவி விலகி தனது முதிர்ச்சியவெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்யும் முன் முஷாஃப் பதவி விலகுவாரா என்ற கேள்விக்கு, சூசகமாக ப‌தி‌ல் அ‌ளி‌த்த சர்தாரி, போர் நடந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு வழியை தப்பிக்க ஏதுவாக விட்டு வைத்திருக்க வேண்டும்; அப்போது தான் தோல்வியுற்றாலும், எதிரியும் நம்மை மரியாதையுடன் நடத்துவர்.

முஷாரஃப் விஷயத்தில் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், சர்வாதிகாரிகளுக்கு பிற நாட்டு நாடாளுமன்றங்கள் முடிவு கட்டியதைப் போல், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முஷாரஃப் பதவி பறிக்கப்படும் என்றார்.

இப்பிரச்சனையில் ராணுவத்தின் தலையீடு இருக்குமா என்ற கேள்விக்கு, பாகிஸ்தான் ராணுவத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.

எனினும் ராணுவத்தின் நிலையை சோதித்துப் பார்க்க பி.பி.பி. விரும்பவில்லை என்றும், எது நடந்தாலும் ஜனநாயகமே இறுதியில் வெல்லும் என்றும் சர்தாரி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்