மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும்: நேபாள பிரதமர் பிரச்சண்டா உறுதி!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (12:18 IST)
நேபாளத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் கடந்த காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரச்சண்டா தெரிவித்துள்ளார்.
காத்மாண்டுவில் தனது பலுவதார் குடியிருப்பில் தொழிலதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த பிரச்சண்டா, மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் மூடப்பட்ட ஆலைகள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க தனது அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
சரக்குந்து ஓட்டுனர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் மூடப்பட்ட கிழக்கு நேபாளத்தில் உள்ள நெடுஞ்சாலை திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரச்சண்டா உறுதியளித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டதால் கிழக்கு நேபாள பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பிரதமராக தேர்வு: நேபாளத்தின் முதல் பிரதமராக மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரச்சண்டா நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
முதல் பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று மாலை நடந்த வாக்கெடுப்பில் பிரச்சண்டா 438 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான ஷேர்-பஹதூர் தியூபா 113 வாக்குகள் மட்டுமே பெற்றார்.