ஜார்ஜியா மீதான தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா: அமெரிக்கா மீது பாய்ச்சல்!
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (19:29 IST)
அமைதியை உருவாக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ஜார்ஜியா மீது கடந்த 5 நாட்களாக நடத்திய தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். ஜார்ஜியா மோதலுக்கு ஒரு வகையில் அமெரிக்காவும் காரணம் என்றும் ரஷ்யா குற்றம்சாற்றியுள்ளது.
"சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைதியை நீடிக்கச் செய்யும் பணிகளில் ரஷ்ய அமைதிக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுவார்கள். அமைதியை ஏற்படுத்த முயன்ற எங்களைத் தாக்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களது படைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன" என்றார் மெத்வதேவ்.
ஜார்ஜியா மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ரஷ்ய ராணுவம் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் கூறினார். இதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்தியுகோவ், ராணுவத் தளபதி ஜெனரல் மக்காராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
ரஷ்யர்கள் அதிகம் வசிக்கக் கூடிய வடக்கு ஒசிடியாவில் முதலில் அமைதிப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறும், அதற்குத் தடையாக ஜார்ஜியா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக நசுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிரெஞ்சு அதிபர் சர்க்கோஸியின் அமைதி முயற்சியை நிராகரித்துள்ள ரஷ்யா, ஜார்ஜியா அதிபர் மிகைல் சாகாஷ்வில்லிக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவையும் கடுமையாகச் சாடியுள்ளது.
"நாங்கள் சாகாஷ்வில்லியை நம்பவில்லை. தெற்கு ஒசிடியாவில் வசிக்கும் ரஷ்யர்களின் மீது அவர் நடத்திய தாக்குதல்களையும், அவருக்குத் தொடர்புடைய போர்க் குற்றங்களையும் அவர் மறுக்க முடியாது" என்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஜியார்ஜியப் படைகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டி சாகாஷ்வில்லிக்கு அமெரிக்கா ஏராளமான நிதியுதவி செய்துள்ளது என்று குற்றம்சாற்றியுள்ள லாவ்ரோவ், ஜார்ஜியா தாக்குதல்களுக்கு ஒரு வகையில் அமெரிக்காவும் காரணம் என்றும் கூறியுள்ளார்.