தெற்கு ஒசிடியாவை ரஷ்யா கைப்பற்றியது: அமெரிக்கா எச்சரிக்கை!
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
ஜார்ஜியாவில் உள்ள தெற்கு ஒசிடியாவை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. அஃப்காசியா உள்ளிட்ட பிற பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதில் இல்லாமல் போகாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒசிடியா பகுதியைச் சேர்ந்தவர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க ஜார்ஜியா ராணுவம் தாக்குதல் நடத்தியதால், ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு ஒசிடியாவில் இருந்து தப்பி ரஷ்யாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்த ரஷ்யப் படையினரின் மீது ஜார்ஜியா படைகள் தாக்குதல் நடத்தின.
இதற்கு எதிராக ரஷ்யப் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஜார்ஜியா நாட்டின் தலைநகர் திபிலிசி மீது ரஷ்ய விமானங்கள் குண்டு வீசின. இதையடுத்து தெற்கு ஒசிடியாவில் இருந்து ஜார்ஜியப் படையினர் திரும்பப் பெறப்பட்டனர். தெற்கு ஒசிடியாவைக் கைப்பற்றிய பிறகும் ரஷ்யப் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை.
ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியில் உள்ள அஃப்காசியா மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதலைத் துவங்கியுள்ளன. ஜார்ஜியப் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, அஃப்காசியாவில் 9,000 ரஷ்யப் படையினர் இருப்பதாகவும், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையாவிட்டால் கடும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள வடக்கு ஒசிட்டியா மாநிலத்தில் இருந்து 6,000 படையினர் தெற்கு ஒசிட்டியாவிற்குள் நுழைந்து, அதன் தலைநகர் ட்ஸ்கின்வேலியின் மீது குண்டுகளை வீசி வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதற்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பிரெஞ்சு அதிபர் சர்கோஸி ரஷ்யா சென்றுள்ளார். ஜார்ஜியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான் ரஷ்யாவின் விருப்பம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸிடம் பேசுகையில், ஜார்ஜியா அதிபர் மிகைல் சாகாஷ்வில்லி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜார்ஜிய அதிபர் மிகைல் சாகாஷ்வில்லியிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜனாதிபதி டிக் செனி, அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதில் இல்லாமல் போகாது என்ற டின் செனி, ரஷ்யாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான பன்னாட்டு உறவையும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.