பயங்கரவாதத்தை எதிர்த்து சார்க் நாடுகள் போராட வேண்டும்: ராஜபக்சே!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (16:54 IST)
இந்தியா, பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராட வேண்டும் என சிறிலங்கா அதிபர் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாடு (சார்க்) கொழும்பு நகரில் இன்று துவங்கியது. சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சே துவக்க உரையாற்றினார்.
தெற்காசிய பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளால் அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தில் தீயவை, நல்லவை என்று எந்த வேறுபாடும் கிடையாது என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் (சார்க் நாடுகள்) இருமடங்காக உயர்த்த வேண்டும் என்றார்.
சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒருமித்த பாரம்பரியம் உடையவர் எனப் பெருமிதம் தெரிவித்த ராஜபக்சே, பயங்கரவாதத்தின் தாக்கத்திலும் சார்க் நாடுகள் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இன்று துவங்கிய சார்க் மாநாட்டில் உணவுப்பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்டவை முக்கிய பிரச்சனைகளாக விவாதிக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி சார்க் சார்பில் உணவுக்கிடங்கு, வளர்ச்சி நிதி அமைப்பது பற்றியும் பேசப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், வங்கதேச தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நேபாள பிரதமர் கொய்ராலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஈரான், ஜப்பான், மொரீஷியஸ், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன், கொரியா ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளன.