அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம்: கிலானி விருப்பம்!
வியாழன், 31 ஜூலை 2008 (13:26 IST)
இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போன்றதொரு புதிய ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடனும் அமெரிக்கா மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள கிலானி, வெளியுறவுத் தொடர்புகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் ரிச்சர்ட் ஹாஸ் உடன் வாஷிங்டனில் பேச்சு நடத்திய போது இதனைத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அணு சக்தி அந்தஸ்தை அமெரிக்கா வழங்கும் அதேநேரத்தில், அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் அணு சக்தி அந்தஸ்தை வழங்க அமெரிக்கா முன்வர வேண்டும், இதில் பாரபட்சம் கூடாது என கிலானி அப்போது குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் மனப்பூர்வமான இருதரப்பு உறவை மேற்கொள்ளவே தமது அரசு விரும்புவதாகவும், இதில் இந்தியாவுடன் காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆவலுடன் உள்ளதாகவும் கிலானி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.