அணு சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது: பிரணாப்!
புதன், 30 ஜூலை 2008 (17:51 IST)
தங்களுக்கான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கபூர்வமான தேவைகளுக்காக அணு தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் உரிமை எல்லா நாடுகளுக்கும் உள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.
எதிர்காலத்தில் எரிசக்தித் துறையில் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளதாக இந்தியாவும் ஈரானும் தெரிவித்துள்ளன.
அணி சேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் சென்றுள்ள மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றிரவு, ஈரான் அதிபர் முகமது அகமதினேஜாத், அயலுறவு அமைச்சர் மனெளச்செர் மொட்டாகி ஆகியோரைச் சந்தித்து, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார்.
இந்தப் பேச்சில், எதிர்காலத்தில் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல இரண்டு தரப்பும் உறுதி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இந்தச் சந்திப்பின் நோக்கம் அதுவல்ல என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும் விடயத்தை முன்னிறுத்தி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஈரானிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் பற்றியும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தனது இந்தியப் பயணத்தின் வெற்றி குறித்தும் ஈரான் அதிபர் முகமது அகமதினேஜாத் பேசியுள்ளார்.
முன்னதாக அணி சேரா நாடுகள் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தங்களுக்கான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கபூர்வமான தேவைகளுக்காக அணு தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் உரிமை எல்லா நாடுகளுக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.