இஸ்தான்புல்லில் இரட்டை குண்டு வெடிப்பில் 15 பேர் பலி!
திங்கள், 28 ஜூலை 2008 (14:48 IST)
இஸ்தான்புல்லில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். 154 பேர் படுகாயமடைந்தனர்.
கங்கொரென் என்னுமிடத்தில், குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குறைந்த சக்தி வாய்ந்த குண்டு முதலில் வெடித்தது.
இதையடுத்து முதல் குண்டு வெடித்த இடத்தில் பொதுமக்கள் பரபரப்பாகக் குவியத் தொடங்கினர். இந்த பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில், சில நிமிடங்கள் கழித்து அடுத்து அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 15 பேர் உடல்சிதறி பலியாயினர். 154 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு காட்சிகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதில் குண்டு வெடித்த இடங்களில் இருந்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும், அந்தப் பகுதி இரத்தக் களமாகவும், நொறுங்கிய கண்ணாடி சிதறல்களும் கிடப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த குண்டு வெடிப்பு பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.