ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோன்சு தீவின் மலைப்பாங்கான இடத்தில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 ஆக பதிவாகியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.26 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்றிரவு 9 மணி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக 110 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதில் சிலரது எலும்புகள் உடைந்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மிதமான மழை, பனிப்பொழிவு காணப்படுவதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.