தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு, மகாத்மா காந்தி சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் டர்பன் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், மண்டேலா சார்பில் அவரது நெருங்கிய நண்பரும், அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராதா 2008ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருதைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேசிய அவர், மண்டேலா துறவியல்ல என்பதை உலக மக்கள் முதலில் உணர வேண்டும் என்றும், பிறரைப் போல் அவரும் சாதாரண மனிதர் தான் என்றும் குறிப்பிட்டார்.
இனப்பாகுபாடு, தீண்டாமையை ஒழிக்கவும், தென்ஆப்ரிக்காவை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து செல்லவும் மண்டேலா மேற்கொண்ட முயற்சியை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அகமது கத்ராதா கூறினார்.
சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு, தியாகத்தின் மூலமாக உலக மக்களின் இதயத்தை தொட்டதற்காக மண்டேலாவுக்கு இந்த அமைதி விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய மண்டேலாவுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு தான் காந்தி அமைதி விருது என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.