நேபாளத்தில் மன்னராட்சி முடிவடைந்து அந்நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அரசை அமைக்க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி இருக்கும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளதால் அங்கு புதிய அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காட்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண பகதூர் மஹரா குடியரசுத் தலைவர் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் தோல்வியைத் தழுவியதால் புதிய அரசை அமைப்பதற்கு கட்சியின் மத்தியக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பதையே குடியரசுத் தேர்தலில் அடைந்த தோல்வி உணர்த்தி உள்ளதால் இந்த முடிவை மாவோயிஸ்ட் மத்தியக்குழு எடுத்ததாக அவர் விளக்கினார்.
அந்நாட்டில் நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற மாவோயிஸ்ட்கள் முதற்கட்டமாக மன்னராட்சியை ஒழிக்க நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றனர்.
இதையடுத்து மன்னராக இருந்த ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலும் நேற்று நடத்தி முடிக்கப்பட்டது. இதன் காரணமாக விரைவில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவோயிஸ்ட்களின் இந்த முடிவு அந்நாட்டில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.