தைவானில் கடும் புயலுக்கு 7 பேர் பலி!
சனி, 19 ஜூலை 2008 (13:02 IST)
தைவானில் மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய 'கல்மேகி' என்னும் கடும் புயல், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6 பேரைக் காணவில்லை.
இந்த கடும்புயல் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு மட்சூ தீவின் கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில், மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய, தெற்கு தைவான் பகுதியில் 6 பேரைக் காணவில்லை. படகில் சிக்கித் தவித்த தம்பதிகள் உள்பட பலர் வெள்ளம் பாதித்தப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
பெருகி வந்த வெள்ளத்தின் காரணமாக சாலைகள் கடும் சேதமுற்றன. இதனால் பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் புயல் காரணமாக 3,600 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட உள்ளூர், சர்வதேச விமான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல கோடி ரூபாய் அளவுக்கு வேளாண்மைப் பொருட்கள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.