இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
வியாழன், 17 ஜூலை 2008 (17:57 IST)
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காது என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் லியு ஜியான்சோவ் தெரிவித்துள்ளார்.
பீஜிங் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனைத் தெரிவித்த அவர், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு இந்தியா பயன்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்யும் என்பதால் சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்றார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விஷயத்தில் எழுந்துள்ள பிரச்சனையை, பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமையின் முக்கிய உறுப்பினர் மற்றும் அணுசக்தி வழங்கல் நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சீனாவின் ஆதரவு, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு முன்னேற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.