நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான மாவோயிஸ்ட், நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூ. கட்சி (யுஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் 19ஆம் தேதிக்குள் பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என நேபாள காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பிரகாஷ் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் அந்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதுடன் அவரை 5 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என நேபாள நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் பதவிக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவில் அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படாத பட்சத்தில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என நேபாள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அர்ஜுன் நர்சிங் கேத்ரி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 17ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.