பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான் மிரட்டல்!
சனி, 12 ஜூலை 2008 (13:19 IST)
பாகிஸ்தான் அரசு ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும், கைது செய்துள்ள தீவிரவாதிகளை உடனே விடுவிக்க வேண்டும் அல்லது தாங்கள் பிடித்து வைத்துள்ள அந்நாட்டைச் சேர்ந்த 29 பாதுகாப்பு படை வீரர்களையும் இன்று பிற்பகல் முதல் ஒவ்வொருவரையாக கொலை செய்து விடுவதாக தெஹ்ரிக்- இ- தாலிபான் பாகிஸ்தான் (TTP) தலைவர் பைதுல்லா மெசூத் மிரட்டல் கெடு விடுத்துள்ளார்.
இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் இன்று மதியம் 2 மணிக்குள் கைது செய்துள்ள தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால் தாங்கள் கடத்தி வைத்துள்ள பாதுகாப்பு படையினரை கொல்லத் தொடங்கிவிடுவோம் என்றும் தாலிபான் செய்திதொடர்பாளர் மவுல்வி ஓமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உள்ளூர் காவல் துறையினர் தோபா பஜார் பகுதியில் இருந்து தாலிபான் தீவிரவாதிகளை கைது செய்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, தோபா, தால் பகுதிகளில் இருந்து பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் 12 பேர், துணை ராணுவத்தினர் 8 பேர், காவல்துறையினர் 7 பேர் உள்பட 29 பேரை பிடித்து வைத்துள்ளோம் என்று ஓமர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பைதுல்லா மசூத்துக்கு நெருக்கமானவரும், தலிபான் இயக்க துணைத்தலைவருமான ரபியுடின் இத்தகவலை மறுத்துள்ளார்.