பெனாசிர் கொலை: பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.நா. ஏற்றது!
வெள்ளி, 11 ஜூலை 2008 (16:20 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கை சுதந்திரமான ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான் கி மூன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், ஆணையத்திற்கான நிதி, உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுதந்திரத்திற்கான வரையறைகள், விசாரணை விதிமுறைகள் ஆணையம் தொடர்பான மற்ற விவரங்கள் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என்று, நேற்று மாலை பான் கி மூன்- உடன் 45 நிமிடங்கள் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
2007, டிசம்பர் 27 இல் ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், நிதி உதவி செய்தவர்கள், செயலாக்கியவர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் இந்த விசாரணைக் குழு அடையாளம் காட்டும் என்றார் குரேஷி.
முன்னதாக, பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் பாகிஸ்தான் அரசு நடத்தும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், சுதந்திரமான விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதை பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நிராகரித்தார்.
பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, ஐ.நா. விசாரணை வேண்டும் என்று தேசியச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.