அணு சக்தி: சீன அதிபருடன் மன்மோகன் சிங் பேச்சு!
செவ்வாய், 8 ஜூலை 2008 (14:05 IST)
ஜி-8 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ-வைச் சந்தித்து இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், பன்னாட்டு அணு சக்தி முகமை மற்றும் அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) ஆகியவற்றிடம் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரம் வரும்போது, அவ்வமைப்புகளில் உறுப்பினராக உள்ள சீனா, இந்தியாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எப்போது பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் செல்வோம் என்ற காலக்கெடு எதையும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிக்காவிட்டாலும், வருகிற 28 ஆம் தேதி நடக்கவுள்ள பன்னாட்டு அணு சக்தி முகமை ஆளுநர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டால், பிறகு அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவிடம் இருந்து இந்தியாவிற்கு அணு எரிபொருள் மற்றும் உயர்- தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்படும்.