ஆஃப்கான் போரால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே!
வெள்ளி, 4 ஜூலை 2008 (14:03 IST)
ஆஃப்கானில் நடைபெற்று வரும் போரால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்று குழந்தைகள் பாதுகாப்பிற்கான ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
குழந்தைகள் அதிக வன்முறைக்கு இலக்காவதோடு, குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்முறை செலுத்தப்படுவதாக ஐ.நா கூறியுள்ளது.
"ஆஃப்கானிஸ்தானில் உள்ளது போல் உலகில் வேறெந்த நாட்டிலும் குழந்தைகள் இந்த அளவிற்கு துன்புறப்படுத்தப்படுவதில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலர் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.
போரின் போது குழந்தைகள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளோடு, கடுமையான வறுமை, கடின உழைப்பு ஆகியவற்றையும் ஆஃப்கான் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
குழந்தைகள் மீதான் வன்முறையில் தான் கண்டவரையில் மிகவும் கொடுமையானது, குழந்தைகள் கொல்லப்படுவது மற்றும் உடல் உறுப்புகளை இழப்பது என்று என்று ராதிகா குமாரசாமி கூறுகிறார்.
இவர் ஆப்கானில் கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட பயணத்தின் போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட, அதிபர் கர்சாய், மற்ற அரசு அதிகாரிகள், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை பிரதி நிதிகள், ராணுவப் படையினர், உதவிக்குழுக்கள், அரசு சாரா சமூக நல அமைப்பினர் ஆகியோரை சந்தித்து விவாதித்தார்.
சர்வதேச படையினரால் இரவு நேரங்களில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகளையும் நேரில் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் சிறுவர்களை ஆயுதப் போரில் ஈடுபடுவதையும் இவர் கடுமையாக கண்டித்துள்ளார். தற்கொலைப் படை உள்ளிட்ட பல்வேறு படைகளில் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.