விடுதலையான இந்தியர் மீண்டும் சிறையிலடைப்பு!
செவ்வாய், 1 ஜூலை 2008 (19:13 IST)
பாகிஸ்தானில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்தியரான ராம் பிரகாஷ், முறையான பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம் பிரகாசை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக வாகா எல்லைக்குக் கொண்டுவரப்பட்ட போதுதான், அவரிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் லாகூர் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்று டான் செய்தித் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ராம் பிரகாசிற்கான பயண ஆவணங்களை இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பவில்லை. அதனால் ராம் பிரகாசை அழைத்துச் செல்ல இந்திய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ராம் பிரகாஷ் விடுதலை குறித்து அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதால் அவருக்கான பயண ஆவணங்களைத் தயாரிக்கவில்லை என்றனர்.
விரைவில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதும், ராம் பிரகாஷ் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ராம் பிரகாஷ், 51, இன்று காலை லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை பூர்த்தி செய்ததை முன்னிட்டு அவரை விடுவிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.