சீன அரசு- தலாய் லாமா இடையே ஏழாவது சுற்றுப் பேச்சு!
திங்கள், 30 ஜூன் 2008 (16:08 IST)
திபெத் விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் சீன அரசிற்கும் இடையிலான ஏழாவது சுற்றுப் பேச்சுக்கள் நாளை பீஜிங்கில் துவங்குகிறது. இப்பேச்சு இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது.
கடந்த மே மாதம் 4 ஆம் தேதி நடந்த பேச்சில் தலாய் லாமா சார்பில் பங்கேற்ற லோடி கியால்ட்சென், கெல்சாங் கியால்ட்சென் ஆகியோர் இன்னும் மூவருடன் பீஜிங் சென்றடைந்தனர் என்று தலாய் லாமாவின் செயலர் டென்சின் தக்லா தெரிவித்தார்.
சீன- திபெத் பேச்சிற்கான திபெத்திய சிறப்புப் படை உறுப்பினர்களான சோனம் என் டாக்போ, புச்சுங் கே செரிங் மற்றும் சிறப்புப் படையின் செயலகத்தைச் சேர்ந்த ஜிக்மே பசாங் ஆகியோர் மேலே குறிப்பிட்ட இன்னும் மூவராவர்.
நாளைய பேச்சு, கடந்த 2002 முதல் சீன அரசிற்கும் தலாய் லாமாவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடக்கும் ஏழாவது கட்டப் பேச்சாகும். இதில் கடந்த மே 4 இல் நடந்த பேச்சில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும்.
கடந்த 11 ஆம் தேதியே நடப்பதாகவிருந்த இப்பேச்சு, சீனாவில் சுமார் 70,000 பேரைப் பலிகொண்ட பூகம்பத்தின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.