தாலிபான் மறைவிடங்களை பாக். ராணுவம் தாக்கு!

சனி, 28 ஜூன் 2008 (15:37 IST)
பெஷாவர்: பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள கைபர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கிடங்களை பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி தாக்கியது.

ஆப்கானிஸ்தான் எல்லையருகேயுள்ள பழங்குடியினர் பகுதி தாலிபான்களின் கோட்டையாக மாறிவருகிறது என்ற செ‌ய்திகளையடுத்தும், பெஷாவரை பிடித்து விடுவோம் என்ற ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் அச்சுறுத்தலை தொடர்ந்தும் பாகிஸ்தானின் புதிய அரசு முதன் முதலாக இத்தகைய தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு பொருட்கள் செல்ல கைபர் பகுதி மிக முக்கியமான வழி என்றும் பாக். அரசு தெரிவித்துள்ளது.

பெஷாவர் எல்லைப்பகுதியில் உள்ள பரா என்ற ஊரில் 24 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அங்கிருந்து கைபருக்கு செல்லும் வழி நெடுக பாக். ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்