மறைந்த இந்திய ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷாவிற்கு அந்த நாட்டு மக்களின் சார்பாக வங்கதேச அரசு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
வங்கதேச உள்துறை அமைச்சக அயலுறவு ஆலோசகர் இஃப்திகார் அஹமத் சௌத்ரி, இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீக்கு எழுதிய கடிதத்தில்: "வங்கதேச மக்களும், அரசும், வங்கதேச விடுதலைப்போரில் ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷாவின் பங்களிப்பை ஒரு போதும் மறக்க முடியாது என்றும், அந்த பங்களிப்புகளை தற்போது நன்றியுடன் நினைவு கூறுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் மூவீன் அகமட் 1971-ம் ஆண்டு போரில் மிகச்சிறந்த உத்திகளை வகுத்துக் கொடுத்ததாக பாராட்டினார். மேலும், "வங்கதேச ராணுவம் அவரது பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூறுவதோடு, மறைந்த அவரது ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துகிறது" என்றார்.
1971-ம் ஆண்டு போரில் இந்திய வங்கதேச கூட்டுப்படையினரை சிறப்பாக வழி நடத்தியவர் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்ஷா என்றும், அவரது தலைமையினால்தான் குறுகிய காலத்தில் வெற்றி கிடைத்தது என்றும் ராணுவ தளபதி அகமட் தன் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.