கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உயர்வு!

வெள்ளி, 27 ஜூன் 2008 (12:54 IST)
நியூயார்க்: கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களைத் தாண்டியுள்ளது.

நியூ யார்க் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையில் ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான (முன்பேர ஒப்பந்த) விலை பீப்பாய் ஒன்றுக்கு 140.39 டாலர்களாக அதிகரித்தது. ஆனால் பிறகு சற்றே குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 140.08 டாலர்களாக இருந்தது.

அதேபோல் லண்டன் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 5.74 டாலர்கள் அதிகரித்து 140.05 டாலர்களாக உயர்ந்துள்ளது.

இதே விலை உயர்வு நிலை நீடித்தால் கச்சா விலை நடப்பு கோடைக் காலத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 150 டாலர்கள் முதல் 170 டாலர்கள் வரை உயரும் என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (ஓபெக்) தலைவர் சகீப் கெலீல் தெரிவித்துள்ளார். ஆனால் பீப்பாய்க்கு 200 டாலர்கள் என்ற அதிகபட்ச விலை உயர்வை எட்டாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தங்களது கச்சா உற்பத்தியை குறைக்கப் போவதாக லிபியா கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்