இந்தியா- பாக். பேச்சு: பயங்கரவாதம் பற்றிய புதிய தகவல்கள் பரிமாற்றம்!
புதன், 25 ஜூன் 2008 (13:30 IST)
பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக தங்களிடம் உள்ள புதிய தகவல்களை இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பரிமாறிக்கொண்டன.
மேலும், அத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் முயற்சிகளிலும் தற்போது இருதரப்பில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பை தொடரவும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூன்றாவது கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "பயங்கரவாதச் சம்பவங்கள் மீதான புதிய தகவல்கள் பரிமாறிக்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
"பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதில் இணைந்து பணியாற்றவும், குறிப்பிடத்தக்க தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் விசாரணையில் உதவுவதிலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதிலும் ஒத்துழைப்பைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
"பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முந்தைய கூட்டங்களின் போது பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, இரு தரப்பு பயங்கரவாதத் தடுப்பு வல்லுநர்களும் பரிசீலனை செய்தனர்" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் உட்பட 70 பேர் பலியான பலியான சம்ஜவ்தா விரைவு ரயில் குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைத் தகவல்களை பாகிஸ்தான் தரப்பு வேண்டும் என்றும், இந்தியத் தரப்பில் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்புகள் பற்றிய விசாரணைத் தகவல்கள் வேண்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடந்த பேச்சில் என்னென்ன விவாதங்கள் ஏற்பட்ட என்பது பற்றி இரு தரப்பு அதிகாரிகளும் தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பாகிஸ்தான் அதிகாரிகள், பேச்சு நல்லமுறையில் உள்ளது என்று மட்டும் கூறினர்.