இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே சமாதான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கும், காஸாவில் தடைகளை ஏற்படுத்தி அதன் பொருளாதார வாழ்வை இடையூறு செய்யும் இஸ்ரேலின் போக்கிற்கும் விடிவு காலம் பிறந்துள்ளது.
ஆனால் இரு தரப்பினருமே இந்த உடன் படிக்கையின் படி நடப்பது குறித்து ஒருவர் மீது ஒருவர் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை 6 மனி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சமாதான உடன்படிக்கை 6 மாத காலங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக இருதரப்பு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
3 நாள் கழித்து இஸ்ரேல் தனது தடைகளை அகற்றி காஸா பகுதிக்குள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும். ஒரு வாரம் கழித்து மேலும் சில பகுதிகளில் ஏற்படுத்தியுள்ள தடைகளை அகற்றி சரக்கு போக்குவரத்திற்கு வழி வகுக்கும். அதன் பிறகு காஸா-எகிப்து இடையே பெரிய எல்லைப் பாதையை அமைக்கவும், இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்கவும் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.