அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபருக்கு சிறை!

செவ்வாய், 17 ஜூன் 2008 (17:12 IST)
ச‌ட்ட‌விரோதமாக ‌மி‌ன்னணு‌ப் பொரு‌ட்களை‌ ஏ‌ற்றும‌தி செ‌ய்த இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனை விதித்து அமெ‌ரி‌க்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் பார்த்த சாரதி சுதர்சன். மின்னணுப் பொருட்களை அமெரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வந்தார்.

இந்தியாவில் உள்ள சாராபாய் விண்வெளி நிலையத்துக்கும், பாரத் டைனமிக் நிறுவனத்துக்கும் 2002 ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்தார். ஆனால் இதற்கு அனுமதி ஏதும் அவர் பெறவில்லை.

இந்த நிறுவனங்கள் ஏவுகணைத் தயாரிப்பிலும், போர் ஜெடவிமானங்களையும் தயாரிக்கும் நிறுவனங்கள் என்று, இந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய அமெ‌ரி‌க்கா தடை விதித்திருந்தது.

இது போன்ற நிறுவனங்களுக்கு எந்த பொருளை ஏற்றுமதி செய்தாலும் அதற்கு அமெரிக்க அரசின் முந்தைய அனுமதி வேண்டியது அவசியம்.

ஆனால் 47 வயதாகும் பார்த்த சாரதி சுதர்சன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த தடை செய்யப்பட்ட ஏற்றுமதித் தொழிலை செய்து வந்துள்ளார். வணிகத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கே ‌மி‌ன்னணு‌ப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தயாரித்து அமெரிக்க அரசை ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த வாஷிங்டன் நீதிமன்றம் பார்த்த சாரதி சுதர்ஷனுக்கு 35 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்