தெற்கு சீனாவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கனமழை காரணமாக சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியான ஸீஜியாங்கில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 8,60,000 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன. உணவு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளம் ஏற்பட்டுள்ள தெற்கு சீனாவின் 9 நகரங்களில் மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஸீஜியாங் நதிக்கரை நகரமான ஷோகிங்கிலிருந்து இது வரை 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மஞ்சள் நதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மஞ்சள் நதியில் வெள்ளம் ஏற்பட்டால், நதியின் தாழ்வான பகுதிகளில் உள்ள ஷான்ஸி, ஷாங்ஸி, ஹீனன் மற்றும் ஷாங்டோங் நகரங்களுக்கு பேராபத்து விளையும் என்று சீன அரசு நாளிதழ் கூறியுள்ளது.