சூடான் நாட்டு விமானம் கார்டூம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது, இதில் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
செவ்வாய் இரவு நடந்த இந்த விமான விபத்து காரணமாக கார்டூம் விமான நிலையம் புதன் காலை வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில், அரசுத் தொலைக்காட்சி இந்த விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் அதிகம் என்றது. ஆனால் நாடாளுமன்ற துணைத் தலைவர் முகமத் அல்- ஹஸன் அல் அமீன் அதனை மறுத்து 30 பேர் பலியானதாக தெரிவித்துள்ளார்.
மொத்தம் 203 பயணிகளுடன் தரையிறங்கிய இந்த விமானத்தில் விபத்திற்கு பிறகு 103 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் உயிர் தப்பியதாக சூடான் வான் வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரி மற்றுமொரு தகவலை தெரிவித்துள்ளார்.
டமாஸ்கஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புறப்படும்போதும் வானிலை மோசமாக இருந்துள்ளது, கார்டூமில் தரையிறங்கிய போதும் மோசமான வானிலை நீடித்துள்ளது. இதனால் தரையிறங்கிய பிறகு எதன் மீதோ மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் விமானம் தீப் பிடித்து எரிந்ததாகவும் பிழைத்தவர்கள் சிலர் கூறியுள்ளனர்.
ஆனால் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் இயந்திரக் கோளாறு காரணமாகவே விமானம் தீப்பிடித்துள்ளது என்றும் சூடான் விமான நிலைய இயக்குனர் கூறியுள்ளார்.
விபத்திற்கான சரியான காரணமும், உயிரிழந்தவர்கள் பற்றிய துல்லியமான விவரமும் இன்னமும் வெளியிடப்படவில்லை.