இந்திய- சீன அயலுறவு அமைச்சர்கள் பேச்சு!
வியாழன், 5 ஜூன் 2008 (18:40 IST)
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று பீஜிங்கில் சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியைச் சந்தித்தார்.
அப்போது, "சர்வதேச நிலவரங்கள், தெற்காசிய விவகாரங்கள், இருதரப்புச் சிக்கல்கள் குறித்து நமது நிலைப்பாடுகள் பற்றி விவாதிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜெய்ச்சியிடம் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இரண்டு அமைச்சர்களும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள எல்லைப் பிரச்சனை, திபெத் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள், எல்லைப் பிரசசனை குறித்து நடத்தியுள்ள 11 சுற்றுப் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர்.
இச்சந்திப்பில் இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், சீனாவிற்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.