ஏழை நாடுகளின் உணவு இறக்குமதி செலவுகள் 40% அதிகரிக்கும்!
வெள்ளி, 23 மே 2008 (16:47 IST)
உணவு தானியத் தேவைக்கு இறக்குமதியை பெருமளவு நம்பியிருக்கும் ஏழை நாடுகள் இந்த ஆண்டில் இறக்குமதிக்காக 40 விழுக்காடு கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 'ஃபுட் அவுட்லுக்' என்ற வெளியீட்டில், குறைந்த வருமான உணவு தானிய இறக்குமதி நாடுகள் இந்த ஆண்டில் இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்கள் 169 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மிகவும் கவலையளிக்கும் ஒரு நிலை என்று இதனை வர்ணிக்கும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உணவு இறக்குமதிக்காக ஏழை நாடுகள் செலவு செய்யும் தொகை 2008ல் 4 மடங்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
உணவு என்பது ஒரு காலத்தில் இருந்தது போல் தற்போது மலிவான பொருள் அல்ல என்று கூறுகிறார் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உதவி தலைமை இயக்குனர் ஹஃபீஸ் கானெம். மேலும் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை உணவுப் பொருட்களின் தற்போதைய வானளாவிய விலையால் மேலும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
உணவு தானியப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், சந்தைகளில் நிலவும் போக்குகளால் விலை குறைவதற்கு இப்போதைக்கு வாய்ப்புகள் மங்கலாகவே உள்ளது என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.