தென்மேற்கு சீன மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 12,000ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் பல செய்திப் பத்திரிக்கைகள் இதனை ஒரு துன்ப தினமாக அறிவித்து "பூமி நகர்ந்த தினம்" என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மதியம் 6.1 என்ற ரிக்டர் அளவிற்கு பலமான பின் அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடுமையான மழை, சாலைகளின் மோசமான நிலைகளால் மீட்புப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.
குறிப்பாக நிலநடுக்க மையத்தை அடையும் வழிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் மீட்புப் படையே இன்று காலைதான் சென்றடைந்துள்ளது. இன்று இரவு வாக்கில்தான் சாலைகளில் உள்ள இடிபாடுகளையும், நிலச்சரிவுகளையும் அகற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இன்னமும் பலர் இடிபாடுகளிடையே சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
பெய்ச்சுவான் பகுதியில் இடிபாடுகளிடையே சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர். பெய்ச்சுவானில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள ஆன்சாங் என்ற இடத்திற்கு நீர், மின்சாரம், மற்றும் எரிவாயு வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதுவரை இடிபாடுகளிலிருந்து 58 பேர்களை மட்டுமே மீட்க முடிந்தது என்று சீனாவின் நிலநடுக்கக் கழகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மீட்புப் பணிகள் கடினமாக உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.