சிறிலங்கா ராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்!
ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (12:24 IST)
சிறிலங்காவில் ராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் இரண்டு லகு ரக போர் விமானங்கள் இன்று காலை குண்டு மழை பொழிந்து திடீர் தாக்குதல் நடத்தியது.
வெளியோயா பகுதியில் நேற்று சிறிலங்காவின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எனினும் இந்தத் தாக்குதல்களில் யாருக்கும் காயம் ஏற்படவோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
செக் குடியரசில் உருவாக்கப்பட்ட ஜெலின் இசட்143 ரக போர் விமானங்களை விடுதலைப் புலிகள் வைத்துள்ளனர். இந்த போர் விமானங்களை கொண்டு விடுதலைப்புலிகள் சிறிலங்கா ராணுவத்தின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 5 முறை தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி கடைசியாக விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் இலங்கையின் வடக்கே உள்ள வெளியோயா என்ற இடத்தில் இன்று அதிகாலை 1.43 மணிக்கு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இரண்டு லகு ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.
இந்த விமானங்கள் சிறிலங்கா ராணுவ நிலைகள் மீது 3 குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் வன்னியில் உள்ள மறைவிடத்திற்கு சென்று விட்டதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறிலங்காவின் வெளியோயா பகுதியில் நேற்று மாலை விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் மீது சிறிலங்கா விமானப்ப டையின் சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலையில் விடுதலைப் புலிகள் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. சிறிலங்கா ராணுவத்தின் முன்னகர்வு முறியடிப்பு!
சிறிலங்காவில் உள்ள மணலாறு மண்கிண்டிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 6 மணிக்கு பல் குழல் வெடிகள் மற்றும் ஆட்லெறி எறிகணைத்தாக்குதலுடன் மண்கிண்டிமலை கொக்குத்தொடுவாய் பகுதிகளில் முன் நகர்வை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிர எதிர்தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின் போது சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.