300 மில்லியன் பவுண்டு மோசடி: 3 இந்தியர்களுக்குச் சிறை!
வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:01 IST)
உலகளவில் கனிம நிறுவனங்கள் நடத்துவதாகக் கூறி பிரிட்டன் மற்றும் அமெரிக்க வங்கிகளில் 300 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலான பணத்தை மோசடி செய்த 3 இந்தியர்களைச் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.ஜி.பி. என்ற நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான வீரேந்திர ரஸ்டோகி (39), ஆனந்த் ஜெயின் (43), கெளதம் மஜூம்தார் (57) ஆகிய மூவரின் மீதான பண மோசடிக் குற்றம் லண்டனின் செளத்வார்க் கிரெளன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருகிற ஜூன் 5 ஆம் தேதி இவர்கள் மூவருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி ஜேம்ஸ் வாட்ஸ்வொர்த், அந்தத் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அநேகமாகக் குற்றவாளிகள் பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடலாம் என்றும் கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு லண்டனில் மேஃபேர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த ரஸ்டோகி, போலி ஆவணங்களின் மூலம் பண மோசடியில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடும் மோசடி அலுவலக (எஸ்.எஃப்.ஓ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேசைகள், நாற்காலிகளைத் தவிர வேறு எந்தச் சொத்துக்களும் இல்லாத சிறிய கடைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை கனிம நிறுவனங்கள் என்று கூறி, 324 போலி நிறுவனங்களின் ஆவணங்களை வைத்து வங்கிகளை ஏமாற்றியுள்ளார் ரஸ்டோகி. இவர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரும், மற்ற இருவரும் இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் கூட தங்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளதாகக் கூறி வங்கிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பவுண்டுகளை கடனாகப் பெற்றுள்ளனர்.