இலங்கையில் கடும் மோதல்!
புதன், 23 ஏப்ரல் 2008 (20:44 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தின் வடக்குப் போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மிகப்பெரிய தாக்குதலைத் துவங்கினர்.
இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்ட்டிலெறி பீரங்கிகள், மோர்ட்டார்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிறிலங்கப் படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
படையினர் இந்த முன்நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணி வரை இந்த முறியடிப்புத் தாக்குதல் நீடித்துள்ளது.
சுமார் 10 மணி நேரம் நீடித்துள்ள இந்தக் கடுமையான மோதலில் சிறிலங்கப் படையினருக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 375 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கப் படைத்தரப்பை மேற்கோள்காட்டி அச்செய்தி மேலும் கூறுகிறது.
இதற்கிடையில் தமிழ்நெட்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இத்தாக்குதலில் சிறிலங்கப் படையினர் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 30 க்கும் மேற்பட்ட படையினரின் உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் 12 பேருந்துகளில் வைத்து மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் பல படையினர் விமானங்கள் மூலம் கொழும்பு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
இதற்கிடையில் சிறிலங்கப் படைத்தரப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 38 படையினர் கொல்லப்பட்டதாகவும், 84 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 16 பேர் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.