விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒருவரை சிறிலங்க அரசு வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்த இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்ததன் மூலம் மனித உரிமையை மதித்துச் செயல்படுவதில் தான் எந்தளவிற்கு இழிநிலையில் இருக்கிறது என்பதை சிறிலங்க அரசு மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது.
மனித உரிமைச் செயல்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தும் சிறிலங்க அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிறிலங்க அரசின் இத்தகைய போக்கினைச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சிறிலங்க அரசு தொடர்ந்து ஈடுபடாமல் இருக்க, சிறிலங்க அரசிற்கு அழுத்தங்களைத் தரவேண்டும் என்றும் கோருகின்றோம்" என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.