சரப்ஜித் தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு இல்லை: பாகிஸ்தான் அரசு!
சனி, 19 ஏப்ரல் 2008 (16:52 IST)
லாகூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃபின் பேச்சாளர் மேஜர் ஜென்ரல் ரஷித் குரேஷி, சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மையற்றவை என்று கூறியுள்ளார்.
சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவது தொடர்பான இறுதி முடிவை புதிதாக பதவியேற்கும் அரசு எடுக்கவேண்டும் என்பதற்காகவே, கடந்த 1ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தண்டனையை ஒரு மாத காலத்திற்கு அதிபர் முஷாரஃப் தள்ளிவைத்ததாகவும், மீண்டும் ஒரு முறை அது தள்ளிப்போடப்படாது என்றும் குரேஷி கூறியுள்ளார்.
சரப்ஜித் சிங்கிற்கு கருணை காட்டி, தண்டனையை குறைக்கும் அதிகாரம் அதிபர் முஷாரஃப்பிடம்தான் உள்ளது என்று அவரது வழக்கறிஞர் ரானா அப்துல் ஹமீத் கூறினார்.
சரப்ஜித்திற்கு தூக்குத் தண்டனை வழங்கியதில் பல சட்ட ரீதியான ஓட்டைகள் உள்ளதெனவும், எனவே, அவருக்கு கருணை காட்டுமாறு கோரி மீண்டும் மனு அளிக்கப்போவதாகவும் கூறினார்.