அரண்மனையை விட்டு மன்னர் வெளியேற வேண்டும்-பிரசந்தா!
சனி, 19 ஏப்ரல் 2008 (16:47 IST)
நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளதை அடுத்து மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்று மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா கோரியுள்ளார்.
இது குறித்து காத்மண்டூ பத்திரிக்கை ஒன்றில் அவர் கூறுகையில், அரண்மனையிலிருந்து மன்னர் வெளியேற அமைதிப் பேச்சு நடத்தி உலகிற்கு இன்னொரு சந்தோஷ அதிர்ச்சியை அளிக்கவுள்ளோம், தேவைப்பட்டால் மன்னரை சந்திக்கவும் தயார் என்று பிரசந்தா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அரண்மனையிலிருந்து வந்த செய்தியில் மன்னர் ஞானேந்திரா தற்போது அரண்மனையை காலி செய்வதாயில்லை என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிரசந்தா இவ்வாறு கூறியுள்ளார். ஞானேந்திரா இந்தியாவில் குடியேறலாம் என்ற செய்திகளும் நிலவுகிறது.
எனினும் மன்னர் அரண்மனையிலிருந்து வெளியேறுவது மரியாதைக்குரிய முறையில் நிறைவேறுவதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களையும் கலந்தாலோசித்து வருவதாக பிரசந்தா தெரிவித்தார்.